Sunday 7 July 2013

யார் இந்த நாகப்பன் படையாட்சி?!

யார் இந்த நாகப்பன் படையாட்சி?! 

சமீபத்தில் நடந்த மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்தின் வீரியம் சட்ட மன்றம், பாராளுமன்றம், தாண்டி ஐநாசபை வரை சென்றது. அந்த அளவிற்கு சத்தியாக்கிரகம் என்ற அமைதி வழி போராட்டம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த போராட்டமாக கருதப்படுகிறது, அது தென்ஆப்பிரிக்காவில் இருந்து தான் முதன்முதலில் அது வீரியமாக உதயமானது.
 
உலகின் போற்றத்தக்க போராட்டமான சத்தியாகிரகத்தின் 
முதன் முதல் தியாகி தான் இந்த நாகப்பன் படையாட்சி!!

ஆனாலும் இவரைப்பற்றி வெளியில் அதிகம் தெரியவில்லை.
காரணம் இவர் பெரும்பான்மை சமூக தமிழரல்லவா.!!

இனி உலகம் போற்றும் அந்த சத்தியாகிரகத்தின் 
முதல் போராளி மற்றும் முதல் தியாகியின் 
வாழ்க்கை வரலாறை முழுமையாக பார்ப்போம்.,

மகாத்மா காந்திக்காக வன்னியர்கள் தியாகம்

ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி படம்

மகாத்மா காந்தியின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போரில் தமிழர்கள் பெருமளவில் பங்கேற்ற போதும், அதிலும் பெரும்பகுதியினராக இருந்தவர்கள் வன்னியர்கள். இன்றைக்கும் தென் ஆப்பிரிக்க தமிழ்சமூகத்தில் முதன்மையாக இருப்பவர்கள் வன்னியர்கள்தான். படையாட்சி எனும் பெயர் இப்போதும் அங்கு பிரபலமான பெயராக உள்ளது. (அண்மையில் தென் ஆப்பிரிக்க அரசாங்கத்தை சோகத்தில் ஆழ்த்திய ஒரு முக்கிய நிகழ்வு அந்நாட்டு கேபினட் அமைச்சர் இராதாகிருஷ்ண படையாட்சியின் மரணம்).

உலகின் முதல் சத்தியாகிரக தியாகி.

மகாத்மா காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை சத்தியாகிரகம் எனப்படுவதாகும். இந்திய விடுதலைப்போராட்டம், நெல்சம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டம், மார்ட்டின் லூதர் கிங்கின் அமெரிக்க கருப்பின உரிமைப் போராட்டம் என உலகின் மிகப்பெரிய போராட்டங்களின் அடிப்படை வடிவம் சத்தியாகிரகம்தான். அப்படிப்பட்ட தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போருக்காக உயிர்த்தியாகம் செய்த உலகின் முதல் தியாகி "சாமி நாகப்பன் படையாட்சி. உலகின் முதல் சத்தியாகிரக உயிர்த் தியாகம் எனும் அந்த மாபெரும் நிகழ்வு வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்டுவிட்டது.
 சாமி நாகப்பன் படையாட்சி
ஜொகனஸ்பர்க் சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். "இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.
ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறை
ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார். 1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

1909 ஆம் ஆண்டு சூலை 19 அன்று மாஜிஸ்ட்ரேட் மேஜர் டிக்சன் என்பவரது தலைமையில் "சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது" குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை சிறை அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்றது. இதற்கு இந்திய வம்சாவழியினர் திரண்ட ஜொகனஸ்பர்க் பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு காந்தி எழுதிய கடிதத்தில் விசாரணை அறிக்கையில் உள்ள விசயங்களே நாகப்பன் சிறைவாசத்தால் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.

சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார் அவர்.
 பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டம்

1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், சூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி.

(தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம் சிதைக்கப்பட்டது, தென் ஆப்பிரிக்காவில் 1994 இல் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 20.4.1997 அன்று மீண்டும் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம் மறுசீரமைக்கப்பட்டது. 
அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு மற்றும் இந்திய தூதரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருட்டின காந்தியும் திறந்து வைத்தனர்.)

தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும்.

தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது -  நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

தனது சகோதரர் இறந்த போது -   நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.

அடுத்ததாக, நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில்  இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும்  நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை.

காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி. சென்னை (21.4.1915), மதுரை (26.3.1919), தூத்துக்குடி (28.3.1919), நாகப்பட்டிணம் (29.3.1919) என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம்  நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.

இந்தியாவின் எரவாடா சிறையில் இருந்த காலத்தில் 'தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகிப் போராட்டம்' எனும் விரிவான நூலை எழுதினார். இந்த நூல் 1928 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் நாகப்பன் குறித்து விரிவாகக் கூறியுள்ளார் மகாத்மா காந்தி.

"நாகப்பன் ஒரு இளம் சத்தியாகிரகி. பதினெட்டு வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்தார். அதிகாலையில் சாலை அமைக்கும் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இரட்டை நிமோனியாவால் தாக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியானவுடன் 6.7.1909 அன்று வீர மரணம் அடைந்தார்.

நாகப்பன் கடைசி நிமிடம் வரை உயிரோடிருந்த ஒவ்வொரு நிமிடமும் சத்தியாகிரகப் போராட்டத்தை மட்டுமே பேசியதாக அவரோடு இருந்தவர்கள் கூறினார்கள். அவர் ஒருபோதும் சிறைக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வதை அவர் பெருமிதமாகக் கருதினார்.

நம்முடைய தராதரத்தில் பார்த்தால் நாகப்பன் எழுத்தறிவற்றவர். அவர் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலமும் சூலு (தென் ஆப்பிரிக்க) மொழியும் பேசினார். அரைகுறை அங்கிலத்தில் எழுதினார். எப்படிப்பார்த்தாலும் அவர் கற்றறிந்தவர் அல்ல. இருந்தாலும் அவரது தேச பக்தி, அவரது வலிமை, அவரது எதையும் தாங்கும் துணிச்சல், மரணத்தையே எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் அவர் எல்லாம் வல்லவராக இருந்தார்.

கற்றறிந்த கல்விமான்களால் தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போர் வெற்றிபெறவில்லை, மாறாக நாகப்பன் போன்ற வீரர்கள்தான் அதனை வெற்றியடைய வைத்தனர்" என்று எழுதியிருக்கிறார் காந்தி.

இத்தனைக்கு பிறகும் விடுதலை அடைந்த இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் வெளியே தெரியாமல் மறைந்து போய்விட்டது.

இப்படியாக - மகாத்மா காந்தியை உருவாக்கிய "தமிழர்கள், வன்னியர்கள்" மற(றை)க்கப்பட்டுவிட்டனர். இதைப்பற்றி பேசினால்
அது "சுய இன, சுய சாதிப் பெருமை" என்று அடையாளப்படுத்தப்படலாம்.

தொடர்புடைய சுட்டிகள்

1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!
2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்
3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி
4. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

மனமார்ந்த நன்றி: haaram.com

Edification: அரசகுலன் வன்னித்தமிழன்

1 comment:

  1. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் பொதிகை தொலைகாட்சியில் தென்னாப்பிரிக்க தமிழர்களை பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அதில்
    ஒருவர் தன் பெயரை மிக்கி படையாட்சி என்று கூறினார்.இதிலிருந்து
    தென்னாப்பிரிக்காவில் ஏராளமான வன்னியர்கள் வாழ்கிறார்கள் எனபது தெரிகிறது.சிவபுராணத்தை பாடுகின்றனர்.ஆனால் தமிழை மறந்து விட்டனர்.சிவபுராணத்தை வழிவழியாக மனப்பாடம் செய்துவைத்து பாடுவதாக அவர் கூரினார்.

    ReplyDelete